திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.1 திருப்பூந்தராய் பண் - இந்தளம் |
செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்த்
துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே.
|
1 |
எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள்
பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச்
சுற்றி நல்லிமை யோர்தொழு பொன்கழ லீர்சொலீர்
பெற்ற மேறுதல் பெற்றிமை யோபெரு மானிரே.
|
2 |
சங்கு செம்பவ ளத்திரள் முத்தவை தாங்கொடு
பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்
துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே.
|
3 |
சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்
பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்
சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்
காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே.
|
4 |
பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன
புள்ளும் நாடொறுஞ் சோபொழில் சூழ்தரு பூந்தராய்த்
துள்ளும் மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர்
வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே.
|
5 |
மாதி லங்கிய மங்கைய ராடம ருங்கெலாம்
போதி லங்கம லமது வார்புனற் பூந்தராய்ச்
சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்
காதி லங்குழை சங்கவெண் தோடுடன் வைத்ததே.
|
6 |
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் மறைந்து போயிற்று.
|
7 |
வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்
துரக்கும் மால்விடைமேல்வரு வீரடி கேள்சொலீர்
அரக்க னாற்றல் அழித்தரு ளாக்கிய ஆக்கமே.
|
8 |
வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்
புரிசை நீடுயர் மாடம் நிலாவிய பூந்தராய்ச்
சுரதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்
கரிய மாலயன் நேடியு மைக்கண் டிலாமையே.
|
9 |
வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற்
புண்ட ரிகம லர்ந்து மதுத்தரு பூந்தராய்த்
தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்
குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே.
|
10 |
மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம் பந்தன் எழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைப் பரவுசொல் மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.11 சீர்காழி பண் - இந்தளம் |
நல்லானை நான்மறை யோடிய லாறங்கம்
வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கிய
சொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம்
இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே.
|
1 |
நம்மான மாற்றி நமக்கரு ளாய்நின்ற
பெம்மானைப் பேயுடன் ஆடல் புரிந்தானை
அம்மானை அந்தணர் சேரு மணிகாழி
எம்மானை ஏத்தவல் லார்க்கிட ரில்லையே.
|
2 |
அருந்தானை யன்புசெய் தேத்தகில் லார்பால்
பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள்
விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி
இருந்தானை யேத்துமின் நும்வினை யேகவே.
|
3 |
புற்றானைப் புற்றர வம்மலை யின்மிசைச்
சுற்றானைத் தொண்டுசெய் வாரவர் தம்மொடும்
அற்றானை அந்தணர் காழி யமர்கோயில்
பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.
|
4 |
நெதியானை நெஞ்சிடங் கொள்ள நினைவார்தம்
விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய
கதியானைக் காருல வும்பொழிற் காழியாம்
பதியானைப் பாடுமின் நும்வினை பாறவே.
|
5 |
செப்பான மென்முலை யாளைத் திகழ்மேனி
வைப்பானை வார்கழ லேத்தி நினைவார்தம்
ஒப்பானை ஓதம் உலாவு கடற்காழி
மெய்ப்பானை மேவிய மாந்தர் வியந்தாரே.
|
6 |
துன்பானைத் துன்பம் அழித்தரு ளாக்கிய
இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார்
அன்பானை அணிபொழிற் காழி நகர்மேய
நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே.
|
7 |
குன்றானைக் குன்றெடுத் தான்புயம் நாலைந்தும்
வென்றானை மென்மல ரானொடு மால்தேட
நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள்
நன்றானை நம்பெரு மானை நணுகுமே.
|
8 |
இப்பதிகத்தில் ஒன்பதாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
9 |
சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்மின்
பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக்
கோவாய கொள்கையி னாணடி கூறுமே.
|
10 |
கழியார்சீ ரோதமல் குங்கடற் காழியுள்
ஒழியாது கோயில்கொண் டானை யுகந்துள்கித்
தழியார்சொல் ஞானசம் பந்தன் தமிழார
மொழிவார்கள் மூவுல கும்பெறு வார்களே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.17 திருவேணுபுரம் (சீர்காழி) பண் - இந்தளம் |
நிலவும் புனலும் நிறைவா ளரவும்
இலகுஞ் சடையார்க் கிடமாம் எழிலார்
உலவும் வயலுக் கொளியார் முத்தம்
விலகுங் கடலார் வேணு புரமே.
|
1 |
அரவார் கரவன் அமையார் திரள்தோள்
குரவார் குழலா ளொருகூ றனிடங்
கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு
விரவா கவல்லார் வேணு புரமே.
|
2 |
ஆகம் மழகா யவள்தான் வெருவ
நாகம் உரிபோர்த் தவனண் ணுமிடம்
போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கள்
மேகந் தவழும் வேணு புரமே.
|
3 |
காசக் கடலில் விடமுண் டகண்டத்
தீசர்க் கிடமா வதுஇன் னறவ
வாசக் கமலத் தனம்வன் றிரைகள்
வீசத் துயிலும் வேணு புரமே.
|
4 |
அரையார் கலைசேர் அனமென் னடையை
உரையா வுகந்தா னுறையும் இடமாம்
நிரையார் கமுகின் நிகழ்பா ளையுடை
விரையார் பொழில்சூழ் வேணு புரமே.
|
5 |
ஒளிரும் பிறையும் முறுகூ விளவின்
தளிருஞ் சடைமே லுடையா னிடமாம்
நளிரும் புனலின் னலசெங் கயல்கள்
மிளிரும் வயல்சூழ் வேணு புரமே.
|
6 |
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
7 |
ஏவும் படைவேந் தன்இரா வணனை
ஆவென் றலற அடர்த்தா னிடமாந்
தாவும் மறிமா னொடுதண் மதியம்
மேவும் பொழில்சூழ் வேணு புரமே.
|
8 |
கண்ணன் கடிமா மலரிற் றிகழும்
அண்ணல் இருவர் அறியா இறையூர்
வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள்
விண்ணிற் றிகழும் வேணு புரமே.
|
9 |
போகம் மறியார் துவர்போர்த் துழல்வார்
ஆகம் மறியா அடியார் இறையூர்
மூகம் மறிவார் கலைமுத் தமிழ்நூல்
மீகம் மறிவார் வேணு புரமே.
|
10 |
கலமார் கடல்போல் வளமார் தருநற்
புலமார் தருவே ணுபுரத் திறையை
நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன
குலமார் தமிழ்கூ றுவர்கூர் மையரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.25 திருப்புகலி (சீர்காழி) பண் - இந்தளம் |
உகலி யாழ்கட லோங்கு பாருளீர்
அகலி யாவினை யல்லல் போயறும்
இகலி யார்புர மெய்த வன்னுறை
புகலி யாம்நகர் போற்றி வாழ்மினே.
|
1 |
பண்ணி யாள்வதோ ரேற்றர் பால்மதிக்
கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப்
புண்ணி யன்னுறை யும்பு கலியை
நண்ணு மின்னல மான வேண்டிலே.
|
2 |
வீசு மின்புரை காதன் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன்
பூசு நீற்றினன் பூம்பு கலியைப்
பேசு மின்பெரி தின்ப மாகவே.
|
3 |
கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன்
படிகொள் பாரிடம் பேசும் பான்மையன்
பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள்
அடிகளை யடைந் தன்பு செய்யுமே.
|
4 |
பாதத் தாரொலி பலிசி லம்பினன்
ஓதத் தார்விட முண்ட வன்படைப்
பூதத் தான்புக லிந்ந கர்தொழ
ஏதத் தார்க்கிட மில்லை யென்பரே.
|
5 |
மறையி னான்ஒலி மல்கு வீணையன்
நிறையி னார்நிமிர் புன்ச டையனெம்
பொறையி னானுறை யிம்பு கலியை
நிறையி னாற்றொழ நேச மாகுமே.
|
6 |
கரவி டைமனத் தாரைக் காண்கிலான்
இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறை
பொருவி டைஉயர்த் தான்பு கலியைப்
பரவி டப்பயில் பாவம் பாறுமே.
|
7 |
அருப்பி னார்முலை மங்கை பங்கினன்
விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும்
பொருப்பி னான்பொழி லார்பு கலியூர்
இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே.
|
8 |
மாலும் நான்முகன் றானும் வார்கழற்
சீல மும்முடி தேட நீண்டெரி
போலும் மேனியன் பூம்பு கலியுள்
பால தாடிய பண்ப னல்லனே.
|
9 |
நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல்
ஒன்ற தாவகை யாவு ணர்வினுள்
நின்ற வன்னிக ழும்பு கலியைச்
சென்று கைதொழச் செல்வ மாகுமே.
|
10 |
புல்ல மேறிதன் பூம்பு கலியை
நல்ல ஞானசம் பந்தன் நாவினாற்
சொல்லும் மாலையீ ரைந்தும் வல்லவர்க்
கில்லை யாம்வினை இருநி லத்துளே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.29 திருப்புகலி (சீர்காழி) - திருவிராகம் பண் - இந்தளம் |
முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும்
பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞாலந்
துன்னிஇமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ்
சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே.
|
1 |
வண்டிரை மதிச்சடை மிலைத்த புனல்சூடிப்
பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர்
புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்
தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே.
|
2 |
பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடி
நாவணவு மந்தணன் விருப்பிடம் தென்பர்
பூவணவு சோலையிருள் மாலையெதிர் கூரத்
தேவண விழாவளர் திருப்புகலி யாமே.
|
3 |
மைதவழும் மாமிடறன் மாநடம தாடிக்
கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்
செய்பணி பெருத்தெழும் உருத்திரர்கள் கூடித்
தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே.
|
4 |
முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப்
பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில் களக்கினொளி காட்டச்
செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே.
|
5 |
வங்கமலி யுங்கடல்வி டத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்திசெய் திருக்குமிட மென்பர்
கொங்கண வியன்பொழிலின் மாசுபனி மூசத்
தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே.
|
6 |
நல்குரவும் இன்பமும் நலங்களவை யாகி
வல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிட மென்பர்
பல்குமடி யார்கள்படி யாரஇசை பாடிச்
செல்வமறை யோருறை திருப்புகலி யாமே.
|
7 |
பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்
அரக்கனை யடர்த்தருளும் அண்ணலிட மென்பர்
நெருக்குறு கடற்றிரைகள் முத்தமணி சிந்தச்
செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே.
|
8 |
கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்
ஆடரவம் வைத்தருளும் அப்பன்இரு வர்க்கும்
நேடஎரி யாகிஇரு பாலுமடி பேணித்
தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே.
|
9 |
கற்றமண ருற்றுலவு தேரருரை செய்த
குற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்
பொற்றொடி மடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்
செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே.
|
10 |
செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்
அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப்
பந்தனுரை செந்தமிழ்கள் பத்துமிசை கூர
வந்தணை மேத்துவர் வானமுடை யாரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.40 திருப்பிரமபுரம் (சீர்காழி) பண் - சீகாமரம் |
எம்பிரான் எனக்கமுத மாவானுந் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.
|
1 |
தாமென்றும் மனந்தளராத் தகுதியராய் உலகத்துக்
காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்
ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்ற
காமன்றன் னுடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே.
|
2 |
நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் திருவடியே
உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல்
அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை எப்போதும்
பன்னுஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே.
|
3 |
சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங்
கோனாளுந் திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையுந்
தேனாளும் பொழிற்பிரம புரத்துறையுந் தீவணனை
நாநாளும் நல்னியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே.
|
4 |
கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறி
பெண்ணிதமாம் உருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பி
எண்ணுதலாஞ் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே.
|
5 |
எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் தன்மைகளே.
|
6 |
சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த
இலைநுனைவேற் றடக்கையன் ஏந்திழையா ளொருகூறன்
அலைபுனல்சூழ் பிரமபுரத் தருமணியை அடிபணிந்தால்
நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே.
|
7 |
எரித்தமயில் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள்
நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான்
உரித்தவரித் தோலுடையான் உறைபிரம புரந்தன்னைத்
தரித்தமனம் எப்போதும் பெருவார்தாம் தக்காரே.
|
8 |
கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய்
அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான்
தெரியாதான் இருந்துறையுந் திகழ்பிரம புரஞ்சேர
உரியார்தாம் ஏழுலகும் உடனாள உரியாரே.
|
9 |
உடையிலார் சீவரத்தார் தன்பெருமை உணர்வரியான்
முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியாந் திருவுருவன்
பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ்
சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே.
|
10 |
தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக்
கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார்
பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.49 சீர்காழி பண் - சீகாமரம் |
பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர்
பாடி யாடிய வோசை நாடொறும்
கண்ணின் நேரயலே பொலியுங் கடற்காழிப்
பெண்ணின் நேரொரு பங்கு டைப்பெரு
மானை யெம்பெரு மானென் றென்றுன்னும்
அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே.
|
1 |
மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல்
மோதி மீதெறி சங்கம் வங்கமுங்
கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழி
வண்ட லம்பிய கொன்றை யானடி
வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினை
விண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே.
|
2 |
நாடெ லாமொளி யெய்த நல்லவர்
நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்
காடெ லாமலர் தேன் துளிக்குங் கடற்காழித்
தோடு லாவிய காது ளாய்சுரி
சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும்
வேடங் கொண்டவர் கள்வினைநீங்க லுற்றாரே.
|
3 |
மையி னார்பொழில் சூழ நீழலில்
வாச மார்மது மல்க நாடொறுங்
கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழி
ஐய னேயர னேயென் றாதரித்
தோதி நீதியு ளேநி னைப்பவர்
உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே.
|
4 |
மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர்
வந்து வந்தொளிர் நித்தி லம்விழக்
கலிக டிந்தகை யார்மருவுங் கலிக்காழி
வலிய காலனை வீட்டி மாணிதன்
இன்னு யிரளித் தானை வாழ்த்திட
மெலியுந் தீவினை நோயவைமே வுவர்வீடே.
|
5 |
மற்று மிவ்வுல கத்து ளோர்களும்
வானு ளோர்களும் வந்து வைகலுங்
கற்ற சிந்தைய ராய்க்கருதுங் கலிக்காழி
நெற்றி மேலமர் கண்ணி னானை
நினைந்தி ருந்திசை பாடுவார் வினை
செற்ற மாந்தரெ னத்தெளிமின்கள் சிந்தையுளே.
|
6 |
தான லம்புரை வேதி யரொடு
தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்
கான லின்விரை சேரவிம்முங் கலிக்காழி
ஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற
வாகி நின்றவொ ருவனே யென்றென்
றானலங் கொடுப்பா ரருள்வேந்த ராவாரே.
|
7 |
மைத்த வண்டெழு சோலை யாலைகள்
சாலி சேர்வய லார வைகலுங்
கத்து வார்கடல் சென்றுலவுங் கலிக்காழி
அத்த னேயர னேய ரக்கனை
யன்ற டர்த்துகந் தாயு னகழல்
பத்த ராய்ப்பர வும்பயனீங்கு நல்காயே.
|
8 |
பரும ராமொடு தெங்கு பைங்கத
லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்
கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழித்
திருவின் நாயக னாய மாலொடு
செய்ய மாமலர்ச் செல்வ னாகிய
இருவர் காண்பரியா னெனவேத்துத லின்பமே.
|
9 |
பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி
யாது வண்டுகி லாடை போர்த்தவர்
கண்டு சேரகிலா ரழகார் கலிக்காழித்
தொண்டை வாயுமை யோடுங் கூடிய
வேடனே சுட லைப்பொ டியணி
அண்ட வாணனென் பார்க்கடையா அல்லல்தானே.
|
10 |
பெயரெ னும்மிவை பன்னி ரண்டினும்
உண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ்
கயலு லாம்வயல் சூழ்ந்தழகார் கலிக்காழி
நயன டன்கழ லேத்தி வாழ்த்திய
ஞான சம்பந்தன் செந்தமிழ் உரை
உயரு மாமொழி வாருலகத் துயர்ந்தாரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.54 திருப்புகலி (சீர்காழி) பண் - காந்தாரம் |
உருவார்ந்த மெல்லியலோர் பாகமுடையீ ரடைவோர்க்குக்
கருவார்ந்த வானுலகங் காட்டிக்கொடுத்தல் கருத்தானீர்
பொருவார்ந்த தெண்கடலொண் சங்கந்திளைக்கும் பூம்புகலித்
திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.
|
1 |
நீரார்ந்த செஞ்சடையீர் நிரையார்கழல்சேர் பாதத்தீர்
ஊரார்ந்த சில்பலியீர் உழைமானுரிதோ லாடையீர்
போரார்ந்த தெண்டிரைசென் றணையுங்கானல் பூம்புகலிச்
சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.
|
2 |
அழிமல்கு பூம்புனலும் அரவுஞ்சடைமே லடைவெய்த
மொழிமல்கு மாமறையீர் கறையார்கண்டத் தெண்தோளீர்
பொழின்மல்கு வண்டினங்கள் அறையுங்கானற் பூம்புகலி
எழின்மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே.
|
3 |
கையிலார்ந்த வெண்மழுவொன் றுடையீர்கடிய கரியின்தோல்
மயிலார்ந்த சாயல்மட மங்கைவெருவ மெய்போர்த்தீர்
பயிலார்ந்த வேதியர்கள் பதியாய்விளங்கும் பைம்புகலி
எயிலார்ந்த கோயிலே கோயிலாக இருந்தீரே.
|
4 |
நாவார்ந்த பாடலீர் ஆடலரவம் அரைக்கார்த்தீர்
பாவார்ந்த பல்பொருளின் பயன்களானீர் அயன்பேணும்
பூவார்ந்த பொய்கைகளும் வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலித்
தேவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.
|
5 |
மண்ணார்ந்த மணமுழவந் ததும்பமலையான் மகளென்னும்
பெண்ணார்ந்த மெய்மகிழப் பேணியெரிகொண் டாடினீர்
விண்ணார்ந்த மதியமிடை மாடத்தாரும் வியன்புகலிக்
கண்ணார்ந்த கோயிலே கோயிலாகக் கலந்தீரே.
|
6 |
களிபுல்கு வல்லவுணர் ஊர்மூன்றெரியக் கணைதொட்டீர்
அளிபுல்கு பூமுடியீர் அமரரேத்த அருள்செய்தீர்
தெளிபுல்கு தேனினமும் மலருள்விரைசேர் திண்புகலி
ஒளிபுல்கு கோயிலே கோயிலாக உகந்தீரே.
|
7 |
பரந்தோங்கு பல்புகழ்சேர் அரக்கர்கோனை வரைக்கீழிட்
டுரந்தோன்றும் பாடல்கேட் டுகவையளித்தீர் உகவாதார்
புரந்தோன்று மும்மதிலு மெதியச்செற்றீர் பூம்புகலி
வரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
|
8 |
சலந்தாங்கு தாமரைமேல் அயனுந்தரணி யளந்தானுங்
கலந்தோங்கி வந்திழிந்துங் காணாவண்ணங் கனலானீர்
புலந்தாங்கி ஐம்புலனுஞ் செற்றார்வாழும் பூம்புகலி
நலந்தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே.
|
9 |
நெடிதாய வன்சமணும் நிறைவொன்றில்லாச் சாக்கியருங்
கடிதாய கட்டுறையாற் கழறமேலோர் பொருளானீர்
பொடியாரும் மேனியினீர் புகலிமறையோர் புரிந்தேத்த
வடிவாருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
|
10 |
ஒப்பரிய பூம்புகலி ஓங்குகோயில் மேயானை
அப்பரிசில் பதியான அணிகொள்ஞான சம்பந்தன்
செப்பரிய தண்டமிழால் தெரிந்தபாட லிவைவல்லார்
எப்பரிசில் இடர்நீங்கி இமையோருலகத் திருப்பாரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.59 சீர்காழி பண் - காந்தாரம் |
நலங்கொள் முத்தும் மணியும் அணியுந் திரளோதங்
கலங்கள் தன்னில் கொண்டு கரைசேர் கலிக்காழி
வலங்கொள் மழுவொன் றுடையாய் விடையா யெனவேத்தி
அலங்கல் சூட்ட வல்லார்க் கடையா அருநோயே.
|
1 |
ஊரார் உவரிச் சங்கம் வங்கங் கொடுவந்து
காரார் ஓதங் கரைமேல் உயர்த்துங் கலிக்காழி
நீரார் சடையாய் நெற்றிக் கண்ணா என்றென்று
பேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே.
|
2 |
வடிகொள் பொழிலில் மிழலை வரிவண் டிசைசெய்யக்
கடிகொள் போதிற் றென்றல் அணையுங் கலிக்காழி
முடிகொள் சடையாய் முதல்வா வென்று முயன்றேத்தி
அடிகை தொழுவார்க் கில்லை அல்லல் அவலமே.
|
3 |
மனைக்கே யேற வளஞ்செய் பவளம் வளர்முத்தங்
கனைக்குங் கடலுள் ஓதம் ஏறுங் கலிக்காழிப்
பனைக்கைப் பகட்டீ ருரியாய் பெரியாய் யெனப்பேணி
நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாலே.
|
4 |
பருதி யியங்கும் பாரிற் சீரார் பணியாலே
கருதி விண்ணோர் மண்ணோர் விரும்புங் கலிக்காழிச்
சுரதி மறைநான் கான செம்மை தருவானைக்
கருதி யெழுமின் வழுவா வண்ணந் துயர்போமே.
|
5 |
மந்த மருவும் பொழிலில் எழிலார் மதுவுண்டு
கந்த மருவ வரிவண் டிசைசெய் கலிக்காழிப்
பந்தம் நீங்க அருளும் பரனே எனவேத்திச்
சிந்தை செய்வார் செம்மை நீங்கா திருப்பாரே.
|
6 |
புயலார் பூமி நாமம் ஓதிப் புகழ்மல்கக்
கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய் கலிக்காழிப்
பயில்வான் றன்னைப் பத்தி யாரத் தொழுதேத்த
முயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்ற முடுகாதே.
|
7 |
அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான் அடியார்க்குக்
கரக்ககில்லா தருள்செய் பெருமான் கலிக்காழிப்
பரக்கும் புகழான் தன்னை யேத்திப் பணிவார்மேல்
பெருக்கும் இன்பந் துன்ப மான பிணிபோமே.
|
8 |
மாணா யுலகங் கொண்ட மாலும் மலரோனுங்
காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலிக்காழிப்
பூணார் முலையாள் பங்கத் தானைப் புகழ்ந்தேத்திக்
கோணா நெஞ்சம் உடையார்க் கில்லை குற்றமே.
|
9 |
அஞ்சி யல்லல் மொழிந்து திரிவார் அமண்ஆதர்
கஞ்சி காலை யுண்பார்க் கரியான் கலிக்காழித்
தஞ்ச மாய தலைவன் தன்னை நினைவார்கள்
துஞ்ச லில்லா நல்ல வுலகம் பெறுவாரே.
|
10 |
ஊழி யாய பாரில் ஓங்கும் உயர்செல்வக்
காழி யீசன் கழலே பேணுஞ் சம்பந்தன்
தாழும் மனத்தால் உரைதத தமிழ்கள் இவைவல்லார்
வாழி நீங்கா வானோ ருலகில் மகிழ்வாரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.65 திருப்பிரமபுரம் (சீர்காழி) பண் - காந்தாரம் |
கறையணி வேலிலர் போலுங் கபாலந் தரித்திலர் போலும்
மறையும் நவின்றிலர் போலும் மாசுணம் ஆர்த்திலர் போலும்
பறையுங் கரத்திலர் போலும் பாசம் பிடித்திலர் போலும்
பிறையுஞ் சடைக்கிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.
|
1 |
கூரம் பதுவிலர் போலுங் கொக்கின் இறகிலர் போலும்
ஆரமும் பூண்டிலர் போலும் ஆமை அணிந்திலர் போலுந்
தாருஞ் சடைக்கிலர் போலும் சண்டிக் கருளிலர் போலும்
பேரும் பலவிலர் போலும் பிரம் புரம்அமர்ந் தாரே.
|
2 |
சித்த வடிவிலர் போலுந் தேசந் திரிந்திலர் போலுங்
கத்தி வருங் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலுங்
மெய்த்த நயனம் இடந்தார்க் காழி யளித்திலர் போலும்
பித்த வடிவிலர் போலும் பிரம புரம்அமர்ந் தாரே.
|
3 |
நச்சர வாட்டிலர் போலும் நஞ்சம் மிடற்றிலர் போலுங்
கச்சுத் தரித்திலர் போலுங் கங்கை தரித்திலர் போலும்
மொய்ச்சவன் பேயிலர் போலும் முப்புரம் எய்திலர் போலும்
பிச்சை இரந்திலர் போலும் பிரம் புரம்அமர்ந் தாரே.
|
4 |
தோடு செவிக்கிலா போலுஞ் சூலம் பிடித்திலர் போலும்
ஆடு தடக்கை வலிய ஆனை உரித்திலர் போலும்
ஓடு கரத்திலர் போலும் ஒள்ளழல் கையிலர் போலும்
பீடு மிகுத்தெழு செல்வப் பிரம் புரம்அமர்ந் தாரே.
|
5 |
விண்ணவர் கண்டிலர் போலும் வேள்வி யழித்திலர் போலும்
அண்ணல் அயன்றலை வீழ அன்று மறுத்திலர் போலும்
வண்ண எலும்பினோ டக்கு வடங்கள் தரித்திலர் போலும்
பெண்ணினம் மொய்த்தெழு செல்வப் பிரம் புரம்அமர்ந் தாரே.
|
6 |
பன்றியின் கொம்பிலர் போலும் பார்த்தற் கருளிலர் போலுங்
கன்றிய காலனை வீழக் கால்கொடு பாய்ந்திலர் போலுந்
துன்று பிணஞ்சுடு காட்டி லாடித் துதைந்திலர் போலும்
பின்றியும் பீடும் பெருகும் பிரம் புரம்அமர்ந் தாரே.
|
7 |
பரசு தரித்திலர் போலும் படுதலை பூண்டிலர் போலும்
அரசன் இலங்கையர் கோனை அன்றும் அடர்த்திலர் போலும்
புரைசெய் புனத்திள மானும் புலியின் அதளிலர் போலும்
பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம் புரம்அமர்ந் தாரே.
|
8 |
அடிமுடி மாலயன் தேட அன்றும் அளப்பிலர் போலுங்
கடிமலர் ஐங்கணை வேளைக் கனல விழித்திலர் போலும்
படிமலர்ப் பாலனுக் காகப் பாற்கடல் ஈந்திலர் போலும்
பிடிநடை மாதர் பெருகும் பிரம் புரம்அமர்ந் தாரே.
|
9 |
வெற்றரைச் சீவரத் தார்க்கு வெளிப்பட நின்றிலர் போலும்
அற்றவர் ஆழ்நிழல் நால்வர்க் கறங்கள் உரைத்திலர் போலும்
உற்றவ ரொன்றிலர் போலும் ஓடு முடிக் கிலர்போலும்
பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரம் புரம்அமர்ந் தாரே.
|
10 |
பெண்ணுரு ஆணுரு அல்லாப் பிரம புரநகர் மேய
அண்ணல்செய் யாதன வெல்லாம் அறிந்து வகைவகை யாலே
நண்ணிய ஞானசம் பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள்
விண்ணவ ரோடினி தாக வீற்றிருப் பாரவர் தாமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.70 திருப்பிரமபுரம் (சீகாழி) - திருச்சக்கரமாற்று பண் - காந்தாரம் |
பிரமனூர் வேணுபுரம் புகலி வெங்குரப் பெருநீர்த் தோணி
புரமன்னு பூந்தராய் பொன்னஞ் சிரபுரம் புறவஞ் சண்பை
அரன்மன்னு தண்காழி கொச்சை வயமுள்ளிட் டங்காதி யாய
பரமனூர் பன்னிரண்டாய் நின்றதிருக் கழுமலம் நாம்பரவு மூரே.
|
1 |
வேணுபுரம் பிரமனூர் புகலிபெரு வெங்குரு வெள்ளத் தோங்குந்
தோணிபுரம் பூந்தராய் தூநீர்ச் சிரபுரம் புறவங் காழி
கோணிய கோட்டாற்றுக் கொச்சை வயஞ்சண்பை கூருஞ் செல்வங்
காணிய வையகத்தா ரேத்துங் கழுமலம் நாங்கருது மூரே.
|
2 |
புகலி சிரபுரம் வேணுபுரஞ் சண்பை புறவங் காழி
நிகரில் பிரமபுரங் கொச்சை வயம்நீர்மேல் நின்ற மூதூர்
அகலிய வெங்குரவோ டந்தண் டராய்அமரர் பெருமாற் கின்பம்
பகரு நகர்நல்ல கழுமலநாங் கைதொழுது பாடு மூரே.
|
3 |
வெங்குருத் தண்புகலி வேணுபுரஞ் சண்பை வெள்ளங் கொள்ளத்
தொங்கிய தோணிபுரம் பூந்தராய் தொகுபிரம புரந்தொல் காழி
தங்கு பொழிற்புறவங் கொச்சை வயந்தலைபண் டாண்ட மூதூர்
கங்கை சடைமுடிமே லேற்றான் கழுமலநாங் கருது மூரே.
|
4 |
தொன்னீரில் தோணிபுரம் புகலி வெங்குருத் துயர்தீர் காழி
இன்னீர வேணுபுரம் பூந்தராய் பிரமனூர் எழிலார் சண்பை
நன்னீர பூம்புறவங் கொச்சை வயஞ்சிலம்ப னகராம் நல்ல
பொன்னீர புன்சடையான் பூந்தண் கழுமலம்நாம் புகழு மூரே.
|
5 |
தண்ணந் தராய்புகலி தாமரையா னூர்சண்பை தலைமுன் ஆண்ட
அண்ணல்நகர் கொச்சை வயந்தண் புறவஞ்சீர் அணியார் காழி
விண்ணியல்சீர் வெங்குரநல் வேணுபுரந் தோணிபுரம் மேலா ரேத்து
கண்ணுதலான் மேவியநற் கழுமலம்நாங் கைதொழுது கருது மூரே.
|
6 |
சீரார் சிரபுரமுங் கொச்சைவயஞ் சண்பையொடு புறவ நல்ல
ஆராத் தராய்பிரம னூர்புகலி வெங்குரவோ டந்தண் காழி
ஏரார் கழுமலமும் வேணுபுரந் தோணிபுர மென்றென் றுள்கிப்
பேரால் நெடியவனும் நான்முகனுங் காண்பரிய பெருமா னூரே.
|
7 |
புறவஞ் சிரபுரமுந் தோணிபுரஞ் சண்பைமிகு புகலி காழி
நறவ மிகுசோலைக் கொச்சை வயந்தராய் நான்முகன் றனூர்
விறலாய வெங்குரவும் வேணுபுரம் விசயன் மேலம் பெய்து
திறலால் அரக்கனைச்செற் றான்றன் கழுமலம்நாஞ் சேரு மூரே.
|
8 |
சண்பை பிரமபுரந் தண்புகலி வெங்குரநற் காழி சாயாப்.
பண்பார் சிரபுரமுங் கொச்சை வயந்தராய் புறவம் பார்மேல்.
நண்பார் கழுமலஞ்சீர் வேணுபுரந் தோணிபுரம் நாணி லாத.
வெண்பற் சமணரொடு சாக்கியரை வியப்பழித்த விமல னூரே.
|
9 |
செழுமலிய பூங்காழி புறவஞ் சிரபுரஞ்சீர்ப் புகலி செய்ய.
கொழுமலரான் நன்னகரந் தோணிபுரங் கொச்சைவயஞ் சண்பை யாய.
விழுமியசீர் வெங்குரவோ டோங்குதராய் வேணுபுரம் மிகுநன் மாடக்.
கழுமலமென் றின்னபெயர் பன்னிரண்டுங் கண்ணுதலான் கருது மூரே.
|
10 |
கொச்சை வயம்பிரம னூர்புகலி வெங்குருப் புறவங் காழி.
நிச்சல் விழவோவா நீடார் சிரபுரம்நீள் சண்பை மூதூர்.
நச்சினிய பூந்தராய் வேணுபுரந் தோணிபுர மாகி நம்மேல்.
அச்சங்கள் தீர்த்தருளும் அம்மான் கழுமலம்நாம் அமரு மூரே.
|
11 |
காவி மலர்புரையங் கண்ணார் கழுமலத்தின் பெயரை நாளும்.
பாவியசீர்ப் பன்னிரண்டும் நன்னூலாப் பத்திமையாற் பனுவல் மாலை.
நாவி னலம்புகழ்சீர் நான்மறையான் ஞானசம் பந்தன் சொன்ன.
மேவி யிசைமொழிவார் விண்ணவரில் எண்ணுதலை விருப்பு ளாரே.
|
12 |
பாண்டிய மன்னனுடைய சுரப்பிணி தீர்க்க மதுரை சென்று ஆசனத்தில் எழுந்தருளியபோது அவ்வரசன் சுவாமிகளை நோக்கி எந்தவூரென்று வினவ, நாமின்னவூரென்று திருவாய் மலர்ந்தருளிய திருப்பதிகம். |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.73 திருப்பிரமபுரம் (சீர்காழி) - திருச்சக்கரமாற்று பண் - காந்தாரம் |
விளங்கியசீர்ப் பிரமனூர் வேணுபுரம்
புகலிவெங் குரமேற் சோலை
வளங்கவருந் தோணிபுரம் பூந்தராய்ச்
சிரபுரம்வண் புறவ மண்மேல்
களங்கமிலூர் சண்பைகமழ் காழிவயங்
கொச்சைகழு மலமென் றின்ன
இளங்குமரன் றன்னைப் பெற் றிமையவர்தம்
பகையெறிவித் திறைவ னூரே.
|
1 |
திருவளருங் கழுமலமே கொச்சைதே
வேந்திரனூர் அயனூர் தெய்வத்
தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர்
காழிதகு சண்பை யொண்பா
வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய்
தோணிபுரம் உயர்ந்த தேவர்
வெருவவளர் கடல்விடம துண்டணிகொள்
கண்டத்தோன் விரும்ப மூரே.
|
2 |
வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் வாழூர்
ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழில்
காழியிறை கொச்சை யம்பொன்
வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய
மிக்கயனூர் அமரர் கோனூர்
ஆய்ந்தகலை யார்புகலி வெங்குரவ
தரன்நாளும் அமரு மூரே.
|
3 |
மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப்
புகலிதராய் தோணிபுரம் வான்
சேமமதில் புடைதிகழுங் கழுமலமே
கொச்சைதே வேந்திரனூர் சீர்ப்
பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற்
சிலம்பனூர் காழி சண்பை
பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின்
பயன்நுகர்வோர் பரவு மூரே.
|
4 |
தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி
வயங்கொச்சை தயங்கு பூமேல்
விரைச்சேருங் கழுமலம்மெய் யுணர்ந்தயனூர்
விண்ணவர்தங் கோனூர் வென்றித்
திரைச்சேரும் புனற்புகலி வெங்குருசெல்
வம்பெருகு தோணிபுரஞ் சீர்
உரைசேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவம்
உலகத்தில் உயர்ந்த வூரே.
|
5 |
புண்டரிகத் தார்வயல்சூழ் புறவமிகு
சிரபுரம்பூங் காழி சண்பை
எண்டிசையோர் இறைஞ்சியவெங் குருப்புகலி
பூந்தராய் தோணிபுரஞ் சீர்
வண்டமரும் பொழில்மல்கு கழுமலம்நற்
கொச்சைவா னவர்தங் கோனூர்
அண்டயனூ ரிவையென்பர் அருங்கூற்றை
யுதைத்துகந்த அப்ப னூரே.
|
6 |
வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங்
கோனூர்வண் புகலி யிஞ்சி
வெண்மதிசேர் வெங்குரமிக் கோரிறைஞ்சு
சண்பைவியன் காழி கொச்சை
கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந்
தோணிபுரம் பூந்தராய் சீர்ப்
பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம்
பால்வண்ணன் பயிலுமூரே.
|
7 |
மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச்
சிலம்பனூர் காழி மூதூர்
நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை
வேணுபுரங் கமல நீடு
கூடியய னூர்வளர்வெங் குருப்புகலி
தராய்தோணி புரங்கூ டப்போர்
தேடியுழல் அவுணர்பயில் திரிபுரங்கள்
செற்றமலைச் சிலைய னூரே.
|
8 |
இரக்கமுடை யிறையவனூர் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் தன்னூர்
நிரக்கவரு புனற்புறவம் நின்றதவத்
தயனூர்சீர்த் தேவர் கோனூர்
வரக்கரவாப் புகலிவெங் குரமாசி
லாச்சண்பை காழி கொச்சை
அரக்கன்விறல் அழித்தருளி கழுமலமந்
தணர்வேத மறாத வூரே.
|
9 |
மேலோதுங் கழுமலமெய்த் தவம்வளருங்
கொச்சையிந் திரனூர் மெய்ம்மை
நூலோதும் அயன்றனூர் நுண்ணறிவார்
குருப்புகலி தராய்தூ நீர்மேல்
சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ்
சிலம்பனூர் செருச்செய் தன்று
மாலோடும் அயனறியான் வண்காழி
சண்பைமண்ணோர் வாழ்த்து மூரே.
|
10 |
ஆக்கமர்சீ ரூர்சண்பை காழியமர்
கொச்சைகழு மலமன் பானூர்
ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய்
சிரபுரமொண் புறவ நண்பார்
பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர்
புகலிவெங் குரவு மென்பர்
சாக்கியரோ டமண்கையர் தாமறியா
வகைநின்றான் தங்கு மூரே.
|
11 |
அக்கரஞ்சேர் தருமனூர் புகலிதராய்
தோணிபுரம் அணிநீர்ப் பொய்கைப்
புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர்
புகழ்க்காழி சண்பை தொல்லூர்
மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம்
வேணுபுரம் அயனூர் மேலிச்
சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் தான்சொன்ன
தமிழ்தரிப்போர் தவஞ்செய் தோரே.
|
12 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.74 திருப்பிரமபுரம் (சீர்காழி) - திருக்கோமூத்திரி பண் - காந்தாரம் |
பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர்
குறைவிலாப் புகலி பூமேல்
மாமகளூர் வெங்குருநல் தோணிபுரம்
பூந்தராய் வாய்ந்த இஞ்சிச்
சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை
புகழ்ச்சண்பை காழி கொச்சை
காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர்
கழுமலம்நாங் கருது மூரே.
|
1 |
கருத்துடைய மறையவர்சேர் கழுமலம்மெய்த்
தோணிபுரம் கனக மாட
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா
யுலகாருங் கொச்சை காழி
திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர்
செங்கமலத் தயனூர் தெய்வத்
தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை
முடியண்ணல் தங்கு மூரே.
|
2 |
ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை
யொளிமருவு காழி கொச்சை
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த்
தோணிபுரங் கற்றசூழ ரேத்துஞ்
சீர்மருவு பூந்தராய் சிரபுரம்மெய்ப்
புறவம்அய னூர்பூங் கற்பத்
தார்மருவும் இந்திரனூர் புகலிவெங்
குருக்கங்கை தரித்தோ னூரே.
|
3 |
தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த்
தோணிபுரந் தரியா ரிஞ்சி
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந்
தராய்புகலி யிமையோர் கோனூர்
தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி
சண்பைசெழு மறைக ளெல்லாம்
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ
னூருலகில் விளங்கு மூரே.
|
4 |
விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை
வேணுபுரம் மேக மேய்க்கும்
இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி
யெழிற்புகலி புறவம் ஏரார்
வளங்கவரும் வயற்கொச்சை செங்குரமாச்
சிரபுரம்வன் னஞ்ச முண்டு
களங்கமலி களத்தவன்சீர் கழுமலங்கா
மன்னுடலங் காய்ந்தோ னூரே.
|
5 |
காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர்
கழுமலமாத் தோணிபுரஞ் சீர்
ஏய்ந்தவெங் குருபுகலி இந்திரனூர்
இருங்கமலத் தயனூர் இன்பம்
வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந்
தராய்கொச்சை காழி சண்பை
சேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள்தம்
பகைகெடுத்தோன் திகழு மூரே.
|
6 |
திகழ்மாட மலிசண்பை பூந்தராய்
பிரமனூர் காழி தேசார்
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம்
வயங்கொச்சை புறவம் விண்ணோர்
புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங்
குருவெம்போர் மகிடற் செற்று
நிகழ்நீலி நின்மலன்றன் அடியிணைகள்
பணிந்துலகில் நின்ற வூரே.
|
7 |
நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி
புரநிகழும் வேணு மன்றில்
ஒன்றுகழு மலங்கொச்சை உயர்காழி
சண்பைவளர் புறவ மோடி
சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந்
தராய்புகலி தேவர் கோனூர்
வென்றிமலி பிரமபுரம் பூதங்கள்
தாங்காக்க மிக்க வூரே.
|
8 |
மிக்ககம லத்தயனூர் விளங்குபுற
வஞ்சண்பை காழி கொச்சை
தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன் சேரூர்
மைக்கொள்பொழில் வேணுபுரம் மதிற்புகலி
வெங்குரவல் அரக்கன் திண்டோள்
ஒக்கஇரு பதுமுடிகள் ஒருபதுமீ
டழித்துகந்த எம்மா னூரே.
|
9 |
எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர்
கழுமலநற் புகலி யென்றும்
பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந்
தரனூர்நற் றோணிபுரம் போர்க்
கைம்மாவை யுரிசெய்தோன் காழியய
னூர்தராய் சண்பை காரின்
மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய்
விளங்கியஎம் இறைவ னூரே.
|
10 |
இறைவனமர் சண்பையெழிற் புறவம்அய
னூர்இமையோர்க் கதிபன் சேரூர்
குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி
புரங்குணமார் பூந்தராய் நீர்ச்
சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர்
கொச்சைகழு மலந்தே சின்றிப்
பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள்
பரிசறியோ அம்மா னூரே.
|
11 |
அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங்
குருக்கொச்சை புறவ மஞ்சீர்
மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி
தோணிபுரந் தேவர் கோனூர்
அம்மான்மன் னுயர்சண்பை தராய்அயனூர்
வழிமுடக்கு மாவின் பாச்சல்
தம்மானொன் றியஞான சம்பந்தன்
தமிழ்கற்போர் தக்கோர் தாமே.
|
12 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.75 சீர்காழி பண் - காந்தாரம் |
விண்ணி யங்குமதிக் கண்ணியான்விரி யுஞ்சடைப்
பெண்ண யங்கொள்திரு மேனியான்பெரு மானனற்
கண்ண யங்கொள்திரு நெற்றியான்கலிக் காழியுள்
மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர்ப் பாதனே.
|
1 |
வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும்
பலிவி ரும்பியதொர் கையினான்பர மேட்டியான்
கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள்
நலிய வந்தவினை தீர்த்துகந்தஎந் நம்பனே.
|
2 |
சுற்ற லாநற்புலித் தோலசைத்தயன் வெண்டலைத்
துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான்
கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுள்
மற்ற யங்குதிரள் தோளெம்மைந்தனவன் நல்லனே.
|
3 |
பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடை
மல்ல யங்குதிரள் தோள்களாரநட மாடியுங்
கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுள்
தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே.
|
4 |
தூந யங்கொள்திரு மேனியிற்பொடிப் பூசிப்போய்
நாந யங்கொள்மறை யோதிமாதொரு பாகமாகக்
கான யங்கொள்புனல் வாசமார்கலிக் காழியுள்
தேன யங்கொள்முடி ஆனைந்தாடிய செல்வனே.
|
5 |
சுரியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே
மொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன்
கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுள்
பழியி லங்குந்துய ரொன்றிலாப்பர மேட்டியே.
|
6 |
முடியி லங்கும்உயர் சிந்தையான்முனி வர்தொழ
அடியி லங்குங்கழ லார்க்கவேயன வேந்தியுங்
கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுள்
கொடியி லங்கும்இடை யாளொடுங்குடி கொண்டதே.
|
7 |
வல்ல ரக்கன்வரை பேர்க்கவந்தவன் தோள்முடி
கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள்
நல்லொ ருக்கியதோர் சிந்தையார்மலர் தூவவே
தொல்லி ருக்கும்மறை யேத்துகந்துடன் வாழுமே.
|
8 |
மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும்
இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர்
வெருவ நின்றதிரை யோதமார்வியன் முத்தவை
கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே.
|
9 |
நன்றி யொன்றுமுண ராதவன்சமண் சாக்கியர்
அன்றி யங்கவர் சொன்னசொல்லவை கொள்கிலான்
கன்று மேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள்
வென்றி சேர்வியன் கோயில்கொண்டவிடை யாளனே.
|
10 |
கண்ணும் மூன்றுமடை யாதிவாழ்கலிக் காழியுள்
அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல்
வண்ண மூன்றுந்தமி ழிற்றெரிந்திசை பாடுவார்
விண்ணு மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.81 திருவேணுபுரம் (சீர்காழி) பண் - காந்தாரம் |
பூதத்தின் படையினீர் பூங்கொன்றைத் தாரினீர்
ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வா னவர்புகுந்து
வேதத்தின் இசைபாடி விரைமலர்கள் சொரிந்தேத்தும்
பாதத்தீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
|
1 |
சுடுகாடு மேவினீர் துன்னம்பெய் கோவணந்தோல்
உடையாடை யதுகொண்டீர் உமையாளை யொருபாகம்
அடையாளம் அதுகொண்டீர் அங்கையினிற் பரசுவெனும்
படையாள்வீர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
|
2 |
கங்கைசேர் சடைமுடியீர் காலனைமுன் செற்றுகந்தீர்
திங்களோ டிளஅரவந் திகழ்சென்னி வைத்துகந்தீர்
மங்கையோர் கூறடையீர் மறையோர்கள் நிறைந்தேத்தப்
பங்கயஞ்சேர் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
|
3 |
நீர்கொண்ட சடைமுடிமேல் நீள்மதியம் பாம்பினொடும்
ஏர்கொண்ட கொன்றையினோ டெழில்மத்தம் இலங்கவே
சீர்கொண்ட மாளிகைமேற் சேயிழையார் வாழ்த்துரைப்பக்
கார்கொண்ட வேணுபுரம் பதியாகக் கலந்தீரே.
|
4 |
ஆலைசேர் தண்கழனி அழகாக நறவுண்டு
சோலைசேர் வண்டினங்கள் இசைபாடத் தூமொழியார்
காலையே புகுந்திறைஞ்சிக் கைதொழமெய் மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம் பதியாகக் கொண்டீரே.
|
5 |
மணிமல்கு மால்வரைமேல் மாதினொடு மகிழ்ந்திருந்தீர்
துணிமல்கு கோவணத்தீர் சுடுகாட்டில் ஆட்டுகந்தீர்
பணிமல்கு மறையோர்கள் பரிந்திறைஞ்ச வேணுபுரத்
தணிமல்கு கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.
|
6 |
நீலஞ்சேர் மிடற்றினீர் நீண்டசெஞ் சடையினீர்
கோலஞ்சேர் விடையினீர் கொடுங்காலன் தனைச்செற்றீர்
ஆலஞ்சேர் கழனியழ கார்வேணு புரம்அமருங்
கோலஞ்சேர் கோயிலே கோயிலாகக் கொண்டீரே.
|
7 |
இரைமண்டிச் சங்கேறுங் கடல்சூழ்தென் னிலங்கையர்கோன்
விடைமண்டு முடிநெறிய விரல்வைத்தீர் வரைதன்னிற்
கரைகண்டிப் பேரோதங் கலந்தெற்றுங் கடற்கவினார்
விரைமண்டு வேணுபுர மேயமர்ந்து மிக்கீரே.
|
8 |
தீயோம்பு மறைவாணர்க் காதியாந் திசைமுகன்மால்
போயோங்கி யிழிந்தாரும் போற்றரிய திருவடியீர்
பாயோங்கு மரக்கலங்கள் படுதிரையால் மொத்துண்டு
சேயோங்கு வேணுபுரஞ் செழும்பதியாத் திகழ்ந்தீரே.
|
9 |
நிலையார்ந்த வுண்டியினர் நெடுங்குண்டர் சாக்கியர்கள்
புலையானார் அறவுரையைப் போற்றாதுன் பொன்னடியே
நிலையாகப் பேணிநீ சரனென்றார் தமையென்றும்
விலையாக ஆட்கொண்டு வேணுபுரம் விரும்பினையே.
|
10 |
இப்பதிகத்தில் பதினொன்றாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.83 திருக்கொச்சைவயம் (சீர்காழி) பண் - பியந்தைக்காந்தாரம் |
நீலநன் மாமிடற்றன் இறைவன் சினத்தன்
நெடுமா வுரித்த நிகரில்
சேலன கண்ணிவண்ணம் ஒருகூ றுருக்கொள்
திகழ்தேவன் மேவு பதிதான்
வேலன கண்ணிமார்கள் விளையாடு மோசை
விழவோசை வேத வொலியின்
சாலநல் வேலையோசை தருமாட வீதி
கொடியாடு கொச்சை வயமே.
|
1 |
விடையுடை யப்பனொப்பில் நடமாட வல்ல
விகிர்தத் துருக்கொள் விமலன்
சடையிடை வெள்ளெருக்க மலர்கங்கை திங்கள்
தகவைத்த சோதிபதி தான்
மடையிடை யன்னமெங்கும நிறையப் பரந்து
கமலத்து வைகும் வயல்சூழ்
கொடையுடை வண்கையாளர் மறையோர்க ளென்றும்
வளர்கின்ற கொச்சை வயமே.
|
2 |
படவர வாடுமுன்கை யுடையா னிடும்பை
களைவிக்கும் எங்கள் பரமன்
இடமுடை வெண்டலைக்கை பலிகொள்ளு மின்பன்
இடமாய வேர்கொள் பதிதான்
நடமிட மஞ்ஞைவண்டு மதுவுண்டு பாடும்
நளிர்சோலை கோலு கனகக்
குடமிடு கூடமேறி வளர்பூவை நல்ல
மறையோது கொச்சை வயமே.
|
3 |
எண்டிசை பாலரெங்கும் இகலிப் புகுந்து
முயல்வுற்ற சிந்தை முடுகிப்
பண்டொளி தீபமாலை யிடுதூப மோடு
பணிவுற்ற பாதர் பதிதான்
மண்டிய வண்டன்மிண்டி வரும்நீர பொன்னி
வயல்பாய வாளை குழுமிக்
குண்டகழ் பாயுமோசை படைநீட தென்ன
வளர்கின்ற கொச்சை வயமே.
|
4 |
பனிவளர் மாமலைக்கு மருகன் குபேர
னொடுதோழ மைக்கொள் பகவன்
இனியன அல்லவற்றை யினிதாக நல்கும்
இறைவன் இடங்கொள் பதிதான்
முனிவர்கள் தொக்குமிக்க மறையோர்க ளோமம்
வளர்தூம மோடி யணவிக்
குனிமதி மூடிநீடும் உயர்வான் மறைத்து
நிறைகின்ற கொச்சை வயமே.
|
5 |
புலியதள் கோவணங்கள் உடையாடை யாக
வுடையான் நினைக்கு மளவில்
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன்
நலமா இருந்த நகர்தான்
கலிகெட அந்தணாளர் கலைமேவு சிந்தை
யுடையார் நிறைந்து வளரப்
பொலிதரு மண்டபங்கள் உயர்மாட நீடு
வரைமேவுகொச்சை வயமே.
|
6 |
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
7 |
மழைமுகில் போலுமேனி யடல்வா ளரக்கன்
முடியோடு தோள்கள் நெரியப்
பிழைகெட மாமலர்ப்பொன் அடிவைத்த பேயொ
டுடனாடி மேய பதிதான்
இழைவள ரல்குல்மாதர் இசைபாடி யாட
விடுமூச லன்ன கமுகின்
குழைதரு கண்ணிவிண்ணில் வருவார்கள் தங்கள்
அடிதேடு கொச்சை வயமே.
|
8 |
வண்டமர் பங்கயத்து வளர்வானும் வையம்
முழுதுண்ட மாலும் இகலிக்
கண்டிட வொண்ணுமென்று கிளறிப் பறந்தும்
அறியாத சோதி பதிதான்
நண்டுண நாரைசெந்நெல் நடுவே யிருந்து
விரைதேரப் போது மடுவிற்
புண்டரி கங்களோடு குமுதம் மலர்ந்து
வயல்மேவு கொச்சை வயமே.
|
9 |
கையினி லுண்டுமேனி யுதிர்மாசர் குண்டர்
இடுசீவ ரத்தி னுடையார்
மெய்யுரை யாதவண்ணம் விளையாட வல்ல
விகிர்தத் துருக்கொள் விமலன்
பையுடை நாகவாயில் எயிறார மிக்க
குரவம் பயின்று மலரச்
செய்யினில் நீலமொட்டு விரியக் கமழ்ந்து
மணநாறு கொச்சை வயமே.
|
10 |
இறைவனை ஒப்பிலாத ஒளிமேனி யானை
உலகங்க ளேழு முடனே
மறைதரு வெள்ளமேறி வளர்கோயில் மன்னி
இனிதா இருந்த மணியைக்
குறைவில ஞானமேவு குளிர்பந்தன் வைத்த
தமிழ்மாலை பாடு மவர்போய்
அறைகழ லீசனாளும் நகர்மேவி யென்றும்
அழகா இருப்ப தறிவே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.89 திருக்கொச்சைவயம் (சீர்காழி) பண் - பியந்தைக்காந்தாரம் |
அறையும் பூம்புன லோடு மாடர வச்சடை தன்மேற்
பிறையுஞ் சூடுவர் மார்பிற் பெண்ணொரு பாக மமர்ந்தார்
மறையி னொல்லொலி யோவா மந்திர வேள்வி யறாத
குறைவில் அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.
|
1 |
சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் மார்பினர் துன்னிய பூதக்
கண்ணத்தர் வெங்கன லேந்திக் கங்குல்நின் றாடுவர் கேடில்
எண்ணத்தர் கேள்விநல் வேள்வி யறாதவர் மாலெரி யோம்பும்
வண்ணத்த அந்தணர் வாழுங் கொச்சை வயமமர்ந் தாரே.
|
2 |
பாலை யன்னவெண் ணீறு பூசுவர் பல்சடை தாழ
மாலை யாடுவர் கீத மாமறை பாடுதல் மகிழ்வர்
வேலை மால்கட லோதம் வெண்டிரை கரைமிசை விளங்குங்
கோல மாமணி சிந்துங் கொச்சை வயமமர்ந் தாரே.
|
3 |
கடிகொள் கூவிள மத்தங் கமழ்சடை நெடுமுடிக் கணிவர்
பொடிகள் பூசிய மார்பிற் புனைவர்நன் மங்கையோர் பங்கர்
கடிகொள் நீடொலி சங்கின் ஒலியொடு கலையொலி துதைந்து
கொடிக ளோங்கிய மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.
|
4 |
ஆடன் மாமதி யுடையா ராயின பாரிடஞ் சூழ
வாடல் வெண்டலை யேந்தி வையக மிடுபலிக் குழல்வார்
ஆடல் மாமட மஞ்ஞை அணிதிகழ் பேடையொ டாடிக்
கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயமமர்ந் தாரே.
|
5 |
மண்டு கங்கையும் அரவு மல்கிய வளர்சடை தன்மேற்
துண்ட வெண்பிறை யணிவர் தொல்வரை வில்லது வாக
விண்ட தானவர் அரணம் வெவ்வழல் எரிகொள விடைமேற்
கொண்ட கோலம துடையார் கொச்சை வயமமர்ந் தாரே.
|
6 |
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
7 |
அன்றவ் வால்நிழ லமர்ந்து வறவுரை நால்வர்க் கருளிப்
பொன்றி னார்தலை யோட்டி லுண்பது பொருகட லிலங்கை
வென்றி வேந்தனை யொல்க வூன்றிய விரலினர் வான்தோய்
குன்ற மன்னபொன் மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.
|
8 |
சீர்கொள் மாமல ரானுஞ் செங்கண்மா ரென்றிவ ரேத்த
ஏர்கொள் வெவ்வழ லாகி யெங்கு முறநிமிர்ந் தாரும்
பார்கொள் விண்ணழல் கால்நீர்ப் பண்பினர் பால்மொழி யோடுங்
கூர்கொள் வேல்வல னேந்திக் கொச்சை வயமமர்ந் தாரே.
|
9 |
குண்டர் வண்துவ ராடை போர்த்ததோர் கொள்கை யினார்கள்
மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டன்
பண்டை நம்வினை தீர்க்கும் பண்பின ரொண்கொடி யோடுங்
கொண்டல் சேர்மணி மாடக் கொச்சை வயமமர்ந் தாரே.
|
10 |
கொந்த ணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் மேய
அந்த ணன்னடி யேத்தும் அருமறை ஞானசம் பந்தன்
சந்த மார்ந்தழ காய தண்டமிழ் மாலைவல் லோர்போய்
முந்தி வான ரோடும் புகலவர் முனைகெட வினையே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.96 சீர்காழி பண் - பியந்தைக்காந்தாரம் |
பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பனெம் பெருமான்
செங்கண் ஆடர வாட்டுஞ் செல்வனெஞ் சிவனுறை கோயில்
பங்க மில்பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவுந்
தங்கு வெண்டிரைக் கானல் தண்வயல் காழிநன் னகரே.
|
1 |
தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கடல் நிறுவி
நாவ தாலமிர் துண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு
ஆவ வென்றரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்
காவ லார்மதில் சூழ்ந்த கடிபொழிற் காழிநன் னகரே.
|
2 |
கரியின் மாமுக முடைய கணபதி தாதை பல்பூதந்
திரிய இல்பலிக் கேகுங் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்
சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநட மாடி
உரிய நாமங்க ளேத்தும் ஒலிபுனற் காழிநன் னகரே.
|
3 |
சங்க வெண்குழைச் செவியன் தண்மதி சூடிய சென்னி
அங்கம் பூணென வுடைய அப்பனுக் கழகிய வூராந்
துங்க மாளிகை யுயர்ந்த தொகுகொடி வானிடை மிடைந்து
வங்க வாண்மதி தடவு மணிபொழிற் காழிநன் னகரே.
|
4 |
மங்கை கூறமர் மெய்யான் மான்மறி யேந்திய கையான்
எங்க ளீசனென் றெழுவார் இடர்வினை கெடுப்பவற் கூராஞ்
சங்கை யின்றிநன் நியமந் தாஞ்செய்து தகுதியின் மிக்க
கங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழிநன் னகரே.
|
5 |
நாறு கூவிள மத்தம் நாகமுஞ் சூடிய நம்பன்
ஏறு மேறிய ஈசன் இருந்தினி தமர்தரு மூதூர்
நீறு பூசிய வுருவர் நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றித்
தேறு வார்கள்சென் றேத்துஞ் சீர்திகழ் காழிநன் னகரே.
|
6 |
நடம தாடிய நாதன் நந்திதன் முழவிடைக் காட்டில்
விடம மர்ந்தொரு காலம் விரித்தறம் உரைத்தவற் கூராம்
இடம தாமறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிற்
குடம தார்மணி மாடங் குலாவிய காழிநன் னகரே.
|
7 |
கார்கொள் மேனியவ் வரக்கன் றன்கடுந் திறலினைக் கருதி
ஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில்மலை யெடுத்தவன் நெரியச்
சீர்கொள் பாதத்தொர் விரலாற் செறுத்தவெஞ் சிவனுறை கோயில்
தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த தண்வயல் காழிநன் னகரே.
|
8 |
மாலும் மாமல ரானும் மருவிநின் றிகலிய மனத்தாற்
பாலுங் காண்பரி தாய பரஞ்சுடர் தன்பதி யாகுஞ்
சேலும் வாளையுங் கயலுஞ் செறிந்துதன் கிளையொடு மேய
ஆலுஞ் சாலிநற் கதிர்கள் அணிவயற் காழிநன் னகரே.
|
9 |
புத்தர் பொய்மிகு சமணர் பொலிகழ லடியிணை காணுஞ்
சித்த மற்றவர்க் கிலாமைத் திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க் கூராஞ்
சித்த ரோடுநல் லமரர் செறிந்தநன் மாமலர் கொண்டு
முத்த னேயரு யென்று முறைமைசெய் காழிநன் னகரே.
|
10 |
ஊழி யானவை பலவும் ஒழித்திடுங் காலத்தி லோங்கு(*)
(*) இச்செய்யுளின் பின்மூன்றடிகள் சிதைந்துபோயின.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.97 சீர்காழி - திருவிராகம் பண் - நட்டராகம் |
நம்பொருள்நம் மக்களென்று நச்சிஇச்சை செய்துநீர்
அம்பரம்அ டைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம்
உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடை
நம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே.
|
1 |
பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி நித்தலும்
ஏவமான செய்துசாவ தன்முனம் மிசைந்துநீர்
தீபமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகிநந்
தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே.
|
2 |
சோறுகூறை யின்றியே துவண்டுதூர மாய்நுமக்
கேறுசுற்றம் எள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம்
ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன்
நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே.
|
3 |
நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும்
உச்சிவம் மெனும்முரை உணர்ந்துகேட்ப தன்முனம்
பிச்சர்பநச் சரவரைப் பெரியசோதி பேணுவார்
இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே.
|
4 |
கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன் றலாதநோய்
உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம்
விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய்
கண்கள்மூன் றுடையவெங் கருத்தர்காழி சேர்மினே.
|
5 |
அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே பிறந்துநீர்
எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோ
பல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான்
கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே.
|
6 |
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று
|
7 |
பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு செல்லுநீர்
ஐமிகுத்த கண்டரா யடுத்துரைப்ப தன்முனம்
மைமிகுத்த மேனிவா ளரக்கனை நெரித்தவன்
பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே.
|
8 |
காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால்
ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம்
மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலா
நீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே.
|
9 |
நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள்
முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனந்
தலைபறித்த கையர்தேரர் தாந்தரிப் பரியவன்
சிலைபிடித்தெ யிலெய்தான் திருந்துகாழி சேர்மினே.
|
10 |
தக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரை
அக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியை
ஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர்
மிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.102 திருச்சிரபுரம் (சீர்காழி) பண் - நட்டராகம் |
அன்ன மென்னடை அரிவையோ டினிதுறை
அமரர்தம் பெருமானார்
மின்னு செஞ்சடை வெள்ளெருக் கம்மலர்
வைத்தவர் வேதந்தாம்
பன்னு நன்பொருள் பயந்தவர் பருமதிற்
சிரபுரத் தார்சீரார்
பொன்னின் மாமலர் அடிதொழும் அடியவர்
வினையொடும் பொருந்தாரே.
|
1 |
கோல மாகதி உரித்தவர் அரவொடும்
ஏனக்கொம் பிளஆமை
சாலப் பூண்டுதண் மதியது சூடிய
சங்கர னார்தம்மைப்
போலத் தம்மடி யார்க்குமின் பளிப்பவர்
பொருகடல் விடமுண்ட
நீலத் தார்மிடற் றண்ணலார் சிரபுரந்
தொழவினை நில்லாவே.
|
2 |
மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத்
தவங்கெட மதித்தன்று
கானத் தேதிரி வேடனா யமர்செயக்
கண்டருள் புரிந்தார்பூந்
தேனைத் தேர்ந்துசேர் வண்டுகள் திரிதருஞ்
சிரபுரத் துறையெங்கள்
கோனைக் கும்பிடும் அடியரைக் கொடுவினை
குற்றங்கள் குறுகாவே.
|
3 |
மாணி தன்னுயிர் மதித்துண வந்தவக்
காலனை உதைசெய்தார்
பேணி யுள்குமெய் யடியவர் பெருந்துயர்ப்
பிணக்கறுத் தருள்செய்வார்
வேணி வெண்பிறை யுடையவர் வியன்புகழ்ச்
சிரபுரத் தமர்கின்ற
ஆணிப் பொன்னினை அடிதொழும் அடியவர்க்
கருவினை யடையாவே.
|
4 |
பாரும் நீரொடு பல்கதிர் இரவியும்
பனிமதி ஆகாசம்
ஓரம் வாயுவும் ஒண்கனல் வேள்வியில்
தலைவனு மாய்நின்றார்
சேருஞ் சந்தனம் அகிலொடு வந்திழி
செழும்புனற் கோட்டாறு
வாருந் தண்புனல் சூழ்சிர புரந்தொழும்
அடியவர் வருந்தாரே.
|
5 |
ஊழி யந்தத்தில் ஒலிகடல் ஓட்டந்திவ்
வுலகங்க ளவைமூட
ஆழி யெந்தையென் றமரர்கள் சரண்புக
அந்தரத் துயர்ந்தார்தாம்
யாழின் நேர்மொழி யேழையோ டினிதுறை
இன்பன்எம் பெருமானார்
வாழி மாநகர்ச் சிரபுரந் தொழுதெழ
வல்வினை அடையாவே.
|
6 |
பேய்கள் பாடப்பல் பூதங்கள் துதிசெய
பிணமிடு சுடுகாட்டில்
வேய்கொள் தோளிதான் வெள்கிட மாநடம்
ஆடும்வித் தகனாரொண்
சாய்கள் தான்மிக வுடையதண் மறையவர்
தகுசிர புரத்தார்தாந்
தாய்க ளாயினார் பல்லுயிர்க் குந்தமைத்
தொழுமவர் தளராரே.
|
7 |
இலங்கு பூண்வரை மார்புடை இராவணன்
எழில்கொள்வெற் பெடுத்தன்று
கலங்கச் செய்தலுங் கண்டுதங் கழலடி
நெரியவைத் தருள்செய்தார்
புலங்கள் செங்கழு நீர்மலர்த் தென்றல்மன்
றதனிடைப் புகுந்தாருங்
குலங்கொள் மாமறை யவர்சிர புரந்தொழு
தெழவினை குறுகாவே.
|
8 |
வண்டு சென்றணை மலர்மிசை நான்முகன்
மாயனென் றிவரன்று
கண்டு கொள்ளவோர் ஏனமோ டன்னமாய்க்
கிளறியும் பறந்துந்தாம்
பண்டு கண்டது காணவே நீண்டவெம்
பசுபதி பரமேட்டி
கொண்ட செல்வத்துச் சிரபுரந் தொழுதெழ
வினையவை கூடாவே.
|
9 |
பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும்
பார்மிசைத் துவர்தோய்ந்த
செறித்த சீவரத் தேரருந் தேர்கிலாத்
தேவர்கள் பெருமானார்
முறித்து மேதிகள் கரும்புதின் றாவியின்
மூழ்கிட இளவாளை
வெறித்துப் பாய்வயற் சிரபுரந் தொழவினை
விட்டிடும் மிகத்தானே.
|
10 |
பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப்
பையர வோடக்கு
நிரைசெய் பூண்திரு மார்புடை நிமலனை
நித்திலப் பெருந்தொத்தை
விரைசெய் பூம்பொழிற் சிரபுரத் தண்ணலை
விண்ணவர் பெருமானைப்
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர்
பரமனைப் பணிவாரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.113 சீர்காழி பண் - செவ்வழி |
பொடியிலங்குந் திருமேனி யாளர்புலி யதளினர்
அடியிலங்குங் கழலார்க்க ஆடும்மடி கள்ளிடம்
இடியிலங்குங் குரலோதம் மல்கவ்வெறி வார்திரைக்
கடியிலங்கும் புனல்முத் தலைக்குங்கடற் காழியே.
|
1 |
மயலிலங்குந் துயர்மா சறுப்பானருந் தொண்டர்கள்
அயலிலங்கப் பணிசெய்ய நின்றவ்வடி கள்ளிடம்
புயலிலங்குங் கொடையாளர் வேதத்தொலி பொலியவே
கயலிலங்கும் வயற்கழனி சூழுங்கடற் காழியே.
|
2 |
கூர்விலங்குந் திருசூல வேலர்குழைக் காதினர்
மார்விலங்கும் புரிநூலு கந்தம்மண வாளனூர்
நேர்விலங்கல் லனதிரைகள் மோதந்நெடுந் தாரைவாய்க்
கார்விலங்கல் லெனக்கலந் தொழுகுங்கடற் காழியே.
|
3 |
குற்றமில்லார் குறைபாடு செய்வார்பழி தீர்ப்பவர்
பெற்றநல்ல கொடிமுன் னுயர்த்தபெரு மானிடம்
மற்றுநல்லார் மனத்தா லினியார்மறை கலையெலாங்
கற்றுநல்லார் பிழைதெரிந் தளிக்குங்கடற் காழியே.
|
4 |
விருதிலங்குஞ் சரிதைத்தொழி லார்விரி சடையினார்
எருதிலங்கப் பொலிந்தேறும் எந்தைக்கிட மாவது
பெரிதிலங்கும் மறைகிளைஞர் ஓதப்பிழை கேட்டலாற்
கருதுகிள்ளைக் குலந்தெரிந்து தீர்க்குங்கடற் காழியே.
|
5 |
தோடிலங்குங் குழைக்காதர் வேதர்சுரும் பார்மலர்ப்
பீடிலங்குஞ் சடைப்பெருமை யாளர்க்கிட மாவது
கோடிலங்கும் பெரும்பொழில்கள் மல்கப்பெருஞ் செந்நெலின்
காடிலங்கும் வயல்பயிலும் அந்தண்கடற் காழியே.
|
6 |
மலையிலங்குஞ் சிலையாக வேகம்மதில் மூன்றெரித்
தலையிலங்கும் புனற்கங்கை வைத்தவ்வடி கட்கிடம்
இலையிலங்கும் மலர்க்கைதை கண்டல்வெறி விரவலால்
கலையிலங்குங் கணத்தினம் பொலியுங்கடற் காழியே.
|
7 |
முழுதிலங்கும் பெரும்பாருள் வாழும்முரண் இலங்கைக்கோன்
அழுதிரங்கச் சிரமுர மொடுங்கவ்வடர்த் தாங்கவன்
தொழுதிரங்கத் துயர்தீர்த் துகந்தார்க் கிடமாவது
கழுதும்புள்ளும் மதிற்புறம தாருங்கடற் காழியே.
|
8 |
பூவினானும் விரிபோதின் மல்குந்திரு மகள்தனை
மேவினானும் வியந்தேத்த நீண்டாரழ லாய்நிறைந்
தோவியங்கே யவர்க்கருள் புரிந்தவ்வொரு வர்க்கிடங்
காவியங்கண் மடமங்கை யர்சேர்கடற் காழியே.
|
9 |
உடைநவின்றா ருடைவிட் டுழல்வாரிருந் தவத்தார்
முடைநவின்றம் மொழியொழித் துகந்தம்முதல் வன்னிடம்
மடைநவின்ற புனற்கெண்டை பாயும்வயல் மலிதரக்
கடைநவின்றந் நெடுமாட மோங்குங்கடற் காழியே.
|
10 |
கருகுமுந்நீர் திரையோத மாருங்கடற் காழியுள்
உரகமாருஞ் சடையடிகள் தம்பாலுணர்ந் துறதலாற்
பெருகமல்கும் புகழ்பேணுந் தொண்டர்க்கிசை யார்தமிழ்
விரகன்சொன்ன இவைபாடி யாடக்கெடும் வினைகளே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.122 திருப்புகலி (சீர்காழி) பண் - செவ்வழி |
விடையதேறி வெறியக் கரவார்த்த விமலனார்
படையதாகப் பரசு தரித்தார்க் கிடமாவது
கொடையிலோவார் குலமும் முயர்ந்தம் மறையோர்கள்தாம்
புடைகொள்வேள்விப் புகையும்பர் உலாவும் புகலியே.
|
1 |
வேலைதன்னில் மிகுநஞ்சினை யுண்டிருள் கண்டனார்
ஞாலமெங்கும் பலிகொண் டுழல்வார் நகராவது
சாலநல்லார் பயிலும் மறைகேட்டுப் பதங்களைச்
சோலைமேவுங் கிளித்தான் சொற்பயிலும் புகலியே.
|
2 |
வண்டுவாழுங் குழல்மங்கை யோர்கூ றுகந்தார்மதித்
துண்டமேவுஞ் சுடர்த்தொல் சடையார்க் கிடமாவது
கெண்டைபாய மடுவில் லுயர்கேதகை மாதவி
புண்டரிக மலர்ப்பொய்கை நிலாவும் புகலியே.
|
3 |
திரியும்மூன்று புரமும் மெரித்துத் திகழ்வானவர்க்
கரியபெம்மான் அரவக் குழையார்க் கிடமாவது
பெரியமாடத் துயருங் கொடியின் மிடைவால்வெயிற்
புரிவிலாத தடம்பூம் பொழில்சூழ் தண்புகலியே.
|
4 |
ஏவிலாருஞ் சிலைப்பார்த் தனுக்கின் னருள்செய்தவர்
நாவினாள்மூக் கரிவித்த நம்பர்க் கிடமாவது
மாவிலாருங் கனிவார் கிடங்கில்விழ வாளைபோய்ப்
பூவிலாரும் புனற்கொய்கை யில்வைகும் புகலியே.
|
5 |
தக்கன்வேள்வி தகர்த்த தலைவன் தையலாளொடும்
ஒக்கவேயெம் முரவோ னுறையும் மிடமாவது
கொக்குவாழை பலவின் கொழுந்தண் கனிகொன்றைகள்
புக்கவாசப் புன்னைபொன் திரள்காட்டும் புகலியே.
|
6 |
இப்பதிகத்தில் ஏழாம் செய்யுள் சிதைந்து போயிற்று.
|
7 |
தொலைவிலாத அரக்கன் னுரத்தைத் தொலைவித்தவன்
தலையுந்தோளும் நெரித்து சதுரர்க் கிடமாவது
கலையின்மேவும் மனத்தோர் இரப்போர்க்குக் கரப்பிலார்
பொலியுமந்தண் பொழில்சூழ் தழகாரும் புகலியே.
|
8 |
கீண்டுபுக்கார் பறந்தார் அயர்ந்தார் கேழலன்னமாய்க்
காண்டுமென்றார் கழல்பணிய நின்றார்க் கிடமாவது
நீண்டநாரை இரையாரல் வாரநின்ற செறுவினிற்
பூண்டுமிக்கவ் வயல்காட்டும் அந்தண் புகலியதே.
|
9 |
தடுக்குடுத்துத் தலையைப் பறிப்பாரொடு சாக்கியர்
இடுக்கணுய்ப்பார் இறைஞ்சாத எம்மாற் கிடமாவது
மடுப்படுக்குஞ் சுருதிப்பொருள் வல்லவர் வானுளோர்
அடுத்தடுத்துப் புகுந்தீண்டும் அந்தண் புகலியே.
|
10 |
எய்தவொண்ணா இறைவன் உறைகின்ற புகலியைக்
கைதவமில்லாக் கவுணியன் ஞானசம் பந்தன்சீர்
செய்தபத்தும் இவைசெப்ப வல்லார்சிவ லோகத்தில்
எய்திநல்ல இமையோர்கள் ஏத்தவிருப் பார்களே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |